கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. காரிலிருந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்ந வழக்கில் தொடர்புடைய ஜமேசா முபீன் கடந்த 2017 ஆம் ஆண்டு பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறன் கொண்ட பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் ஆஜரான ஜமேசா முபீன் மனைவி, நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கு தொடர்பாக சைகை மொழியில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். நேற்று மாலை 3.45 மணியளவில் தொடங்கி 6.45 மணி வரையில் 3 மணி நேரம் தனது தரப்பு வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். இந்த சைகை மொழியிலான வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் இருந்த சைகை மொழி, மொழிபெயர்ப்பாளர் மொழி பெயர்த்தார்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக, ஜமேசா முபீன் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் நேற்று சூலூர் ராணுவ வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் வைத்து செயலிழக்க செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.