பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20ம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி-க்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, உயர் நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட விசாரணையில் 122 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், 72 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, எண்ணிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி, எஸ்.பி. உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு டிஜிபி, உள்துறை கூடுதல் செயலாளருக்குப் பரிந்துரைத்துள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்ட இரு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, இரு அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து டிசம்பர் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, மேற்கொண்டு கால அவகாசம் தேவைப்பட்டால் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் அனுமதித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை முடித்தது தொடர்பாக டிசம்பர் 23ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 23க்கு தள்ளிவைத்தார்.