விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - புதுச்சேரி புறவழி சாலை அருகிலுள்ள இரும்பை கிராமம் பகுதியில் சாய்பாபா கோயில் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அதில் பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்காக சுமார் 8 லட்சம் செலவில், 2 டன் எடையுள்ள மார்பிளாலான புதிய சாய்பாபா சிலை ஒன்று தயார் செய்து வரவழைக்கப்பட்டது. இது, கட்டப்பட்டுவரும் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு கூரை கொட்டகையில் மரப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைத்திருந்தார் கோயிலை கட்டி வரும் நிர்வாகி சந்துரு.
நேற்று முன்தினம் காலை சென்று பார்த்தபோது, புதிய சாய்பாபா சிலையின் தலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தது. சிலை வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டி கொளுத்தப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகி சந்துரு, ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்களது விசாரணையில் கோயில் பூசாரி சாய்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டது. சாய்பாபா கோயில் பூசாரியான சாய்குமார் அதே பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஏற்கனவே அங்கு இருந்த பழைய சாய்பாபா கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக பூசாரியாக வேலை செய்து வந்தார். தற்போது புதிய கோயில் கட்டுமான பணியையும் மேற்பார்வை இட்டுக் கொண்டு, பழைய கோயில் பூஜைகளையும் செய்து கொண்டு அங்கு தங்கி உள்ளார்.
சம்பவத்தன்று இரவு, கோயிலில் தங்கியிருந்த சாய்குமாரிடம் அறை சாவி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அறையை கடப்பாரை கொண்டு உடைத்து உள்ளே சென்று சாய்பாபா சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து பூசாரி சாய்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் பூசாரி சாய்குமார், புதிய சாய்பாபா சிலையை உடைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் அவர், “தற்போது கொட்டகையில் 3 அடி உயரம் உள்ள சாய்பாபா சிலையை வைத்து வழிபட்டு வருகிறோம். அந்த பழைய சாய்பாபா சிலைக்கு சக்தி மிகவும் அதிகம். புதிதாக கட்டப்படும் கோயிலில் தற்போது உள்ள பழைய சிலையை அங்கே கொண்டு சென்று மூலவராக வைத்து வழிபட வேண்டும் என்று என்னுடைய கனவில் சாய்பாபா வந்து கூறினார். அதன் காரணமாக புதிய கோயிலில் வைக்க கொண்டுவரப்பட்ட புதிய சாய்பாபா சிலையை வைப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. நான் கோயில் நிர்வாகி சந்துருவிடம் சொன்னால்; அவர் என் பேச்சு கேட்க மாட்டார் என்பதால் அந்த புதிய சிலையை அன்றிரவு நான்தான் சேதப்படுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகி மற்றும் போலீசார் சாய்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.