Skip to main content

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிய தன்னார்வலர்கள்: கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் என பொன்ராஜ் பேச்சு

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

 


    கஜா புயலின் தாக்கத்தில் விவசாயிகள், மீனவர்கள் வீடுகள், மரங்கள், படகுகள் என்று தங்கள் வாழ்வாதரங்களை இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள். அரசாங்கம் ஏதோ நிவாரணங்கள் கொடுத்தாலும் அந்த நிவாரணங்கள் இவர்களின் ரணங்களுக்கு மருந்தாகவில்லை. இந்த நிலையில் தான் அரசாங்கம் வரும் முன்பே தன்னார்வலர்கள் களமிறங்கி மீட்பு பணி முதல் நிவாரணப் பணிகளும் சிறப்பாக செய்தனர்.

 

p

 

தஞ்சை மாவட்டம் பேராவூரணி  அருகே உள்ள  இரண்டாம்புளிக்காடு ஊராட்சி செம்பருத்தி கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இவர்களது குடிசை  வீடுகளை   கஜா புயல் தரை மட்டமாக்கியது. இந்த பகுதிக்கு  நிவாரணம் வழங்க வந்த அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம், இராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம், செந்தமிழ் மக்கள் ஸ்போர்ட்ஸ் & கல்ச்சரல் கனெக்ட், வட கரோலினா, அமெரிக்கா இளங்கோ, மோகன், நாகர்கோவில் சவுத் ரோட்டரி சங்கம் இணைந்து  குடியிருக்க   இடம் இன்றி தவித்த இப்பகுதி மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவெடுத்தனர். 

 

இதையடுத்து சுமார் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் 42 குடிசை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு  ஏப்ரல் .24 புதன்கிழமை  அன்று பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

நிகழ்ச்சிக்கு  ரோட்டரி அறக்கட்டளையின் மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் சங்கம்   ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஜே.கே.குமார் முன்னிலை வகித்தார். 

 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின்  அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ் கல்வெட்டை திறந்து வைத்து வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்து பேசினார்.

 

அவர் பேசுகையில், "கனவு காணுங்கள் என்றார் அய்யா டாக்டர் அப்துல் கலாம். கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும். 18 வருடமாக இப்பகுதியில் வாழ்ந்து, கடலுக்குள் சென்று தொழில் செய்து வருகிறீர்கள். குடிமனைப்பட்டா இல்லாமல், குடியிருக்க வீடுகள் இல்லாமல் வசித்து வருகிறீர்கள். தற்போது சிறிய குடிசை வீடுகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

 

மாவட்ட ஆட்சியரை சந்தித்துப் பேசி, பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மின்வசதி கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள். கல்வியின் மூலம் உங்கள் குடும்பங்கள் நல்ல நிலையை அடையமுடியும். பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். 

 

சாதி, மதத்திற்கு ஆட்படாமல் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுங்கள்.  மது அருந்தாதீர்கள். புகை பிடிக்காதீர்கள். குழந்தைகள் நம்மைப் பார்த்து கெட்டுப் போய் விடக்கூடாது.  தற்போதைய தற்காலிக உதவியாகத்தான் இந்த வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம்.  மீண்டும்  இது போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் இந்த வீடுகள் பாதுகாப்பானது  கிடையாது. எனவே மத்திய, மாநில அரசுகள் நிரந்தரமான பாதுகாப்பான வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும். வேலையின்றி தவிக்கும் உங்களை போன்றவர்களுக்கு வேலை வாய்ப்பை அரசு உருவாக்கி தர வேண்டும்'' என்று  பேசினார். 

 

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் டி.சோமசுந்தரம், செயலாளர் ஜி.டி.அருண்பிரசாத், திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சேக் செய்யது புகாரி, நாகர்கோவில் சவுத் ரோட்டரி சங்கத் தலைவர் டி.மோகன்தாஸ், செயலாளர் யு.எஸ்.அஸ்வின், உறுப்பினர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். மேலும் டாக்டர் விஜி ஏற்பாட்டில் ரூ 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 42 சோலார் மின் விளக்குகள் வழங்கப்பட்டது. 
        
 

சார்ந்த செய்திகள்