கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள திருவட்டத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 58). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பெண் நீதிபதியின் உதவியாளரை எனக்கு தெரியும். அவர் மூலம் நாமக்கல் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி திட்டக்குடி பகுதியில் உள்ள தாழநல்லூர் செல்வராசு, மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, கொட்டாரம் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், வதிஷ்டபுரம் அழகேசன் என ஒவ்வொருவரிடமும் இரண்டரை லட்சம் ரூபாய் என பலரிடம் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால் சுப்பிரமணியன் கூறியபடி யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை.
பணம் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தனர். அதில் சுப்பிரமணியன் மீது மோசடி, ஆபாசமாக திட்டுதல், மிரட்டல், ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்தனர். இது சம்பந்தமான வழக்கு திட்டக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நீதிபதி அன்பு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். அந்த தீர்ப்பில் சுப்பிரமணியன் மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஒவ்வொரு பிரிவுகளின் மீதும் இரண்டு ஆண்டுகள் வீதம் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக சர்மிளா பானு ஆஜராகி வாதாடி சுப்பிரமணியனுக்கு தண்டனை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.