நெடுஞ்சாலை பராமரிப்பு தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு இறுதி அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தாம்பரம் - திண்டிவனம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளின் உரிமக் காலம் முடிந்துவிட்டதால், சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த ஜோசப் சகாயராஜ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைகள் பராமரிப்பு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வழக்கறிஞர், பதில் மனு தயாராக இருப்பதாகவும், அதில் கையெழுத்திடும் அதிகாரி டெல்லி சென்றுள்ளதால் அதைத் தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வேண்டுமென்றும் கோரினார்.
அப்போது சாலை விரிவாக்கப் பணிகளின்போது வெட்டப்படும் ஒவ்வொரு பழமையான மரத்திற்கு ஈடாக, 10 மரக்கன்றுகளை நடவேண்டுமென்ற உச்ச நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமல்படுத்தவில்லை என நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், சுங்கச்சாவடிகளில் போதிய சுகாதார வசதி, ஆம்புலன்ஸ் வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என மற்றொரு இணைப்பு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்ததாரர்கள் செய்யும் விதிமீறல்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தட்டிக்கேட்காமல், கண்ணை மூடிக்கொண்டுள்ளதால், சுங்கக்கட்டணத்தை வசூலிக்கத் தடைவிதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, நெடுஞ்சாலை பராமரிப்பு, விரிவாக்கம், மரங்கள் நடப்பட்டது குறித்து டிசம்பர் 16-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு இறுதி அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 16-ஆ ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.