தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அச்சங்குட்டம் பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் மதப் பிரச்சனை ஏற்படுத்தியதாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் மதத்தின் பெயரால் இளைஞர்களைப் பிளக்கிறார்கள் என இந்து முன்னணி அமைப்புக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
அச்சங்குட்டம் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கிறிஸ்தவ நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தது. இந்நிலையில் அரசு உதவிபெறும் அந்தப் பள்ளியின் பழைய கட்டடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானதால் பாஜக தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரு மதத்தினர் இடையே மோதல்களை ஏற்படுத்தும் வகையில் நடந்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் 11 பேரும் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அப்பொழுது, குழந்தைகளின் பள்ளிச் சான்றிதழ் யாரிடம் உள்ளது என்பது பற்றி விசாரிக்க வேண்டியுள்ளதால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவித்த நீதிமன்றம், மதத்தின் பெயரால் இளைஞர்கள் மத்தியில் பிளவை உண்டாக்குகிறார்கள். மதத்தின் அடிப்படையில் இளைஞர்களிடம் வெறுப்புணர்வு, ஒற்றுமையின்மை ஏற்படுத்தி வருகின்றனர் என இந்து முன்னணி அமைப்புக்கு கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே 11 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.