தேனி கைலாசபட்டி பட்டியலின கோவில் பூசாரி தற்கொலை விவகாரம்- முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தம்பி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் வழக்கில் தொடர்புடைய ஆறு பேரும் நீதிமன்றத்திற்கு வந்தனர். தேனி, பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து. இவர் கைலாசபட்டி கைலாசநாதர் கோவில் பூசாரியாக பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.
கோவிலில் கடை ஒதுக்குவது சம்பந்தமாக பட்டியலின கோவில் பூசாரி நாகமுத்துவுக்கும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் நாகமுத்து தாக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7- ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாக அப்போதைய பெரியகுளம் நகராட்சி தலைவரும், கோவில் அறங்காவலர் ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி, மணிமாறன், லோகு, சிவக்குமார், ஞானம், சரவணன்,உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி என்பவர் இறந்து விட்டார். மற்ற 6 பேர் மீதான வழக்கு விசாரணை தற்போது திண்டுக்கல் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். வழக்கின் அனைத்து விசாரணையும் முடிவு பெற்ற நிலையில் இன்று ஓ.ராஜா உ்ட்பட ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதைத் தொடர்ந்து நீதியரசர் முரளிதரன் ஓ.ராஜா உட்பட ஆறு பேரும் இந்த வழக்கில் இருந்து விடுதலை என தீர்ப்பு கூறினார். அதைக்கண்டு ஓ.ராஜா உடன் வந்த ஆதரவாளர்கள் சந்தோசம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து ஆதரவாளர்கள் ஓ.ராஜாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.