ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்து வருகிற செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற உள்ளதாக சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ராணுவ போர் விமானங்கள் கொள்முதல் செய்ததில் வரலாறு காணாத ஊழல் நடைபெற்றுள்ளதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பலமுறை ஆதாரத்தோடு குற்றம் சாட்டியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு நேருக்கு நேராக ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் குறித்து கடுமையாக உரையாற்றினார். இதற்கு பிரதமர் மோடி எந்தவிதமான பதிலையும் தெரிவிக்கவில்லை.
மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கல் பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடத்த எனது தலைமையில் வருகிற 4.9.2018 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பிரிவுகள் மற்றும் துறைகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர்களாக உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் டாக்டர் ஜி. சின்னாரெட்டி, MLA, சஞ்ஜய் தத், Ex.MLC ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மேலும் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர். மிக முக்கியமான இக்கூட்டத்தில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.