
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற வார்டு உறுப்பினர்கள் கவுன்சிலர்களாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக திசையன்விளை பேரூராட்சியின் 18 வார்டுகளில் அ.தி.மு.க. 09, தி.மு.க. 02, காங்கிரஸ் 02, சுயேட்சை 03, தே.மு.தி.க 01, பா.ஜ.க. 01, என்ற அளவில் வார்டுகளைக் கைப்பற்றின. இதில் பா.ஜ.க. கவுன்சிலர் அ.தி.மு.க.விற்கு ஆதரவு கொடுத்ததால் அ.தி.மு.க.வின் பலம் 10 என்றாகி பேரூராட்சியை கைப்பற்றுகிற நிலை, இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மரபுப்படி அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் தொண்டர்கள் புடை சூழ கவுன்சிலர் பொறுப்பு உறுதி மொழி ஏற்றனர். பேரூராட்சி செயல் அலுவலர் கோபால் அவர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவிற்கு வரும் போதும், விழா முடிந்து திரும்பிச் செல்லும் போதும் தங்கள் தலையில் அ.தி.மு.க.வினர் ஹெல்மெட் அணிந்து சென்றனர். இந்த குறித்து அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசனிடம் கேட்டதில், “கவுன்சிலர்கள் தங்கள் தலைக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கருதியதால் ஹொல்மெட் அணிந்து வந்தனர்” என்றார் சிம்பிளாக.
தி.மு.க.விடமிருந்து பேரூராட்சி நழுவி அ.தி.மு.க.வசம் போனதால் அரசியல் மட்டத்தில் ஏற்பட்ட பதற்றத்தில் பதவி ஏற்பு தினத்தில் பிரச்சனையாகி ஏடா கூடமானால் நிலைமை மோசமாகிவிடும் எனக் கருதியே அ.தி.மு.க.கவுன்சிலர்கள் தங்கள் தலையைப் பாதுகாக்க ஹெல்மெட்டுடன் வந்ததாகவும் சிலர் பேசிகொள்கின்றனர். பதவி ஏற்பு தினத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க வள்ளியூர் ஏ.எஸ்.பி.சமயசிங் மீனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடனிருந்தார்.