Skip to main content

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

High Court issues order to Tamil Nadu Transport CommissionerHigh Court issues order to Tamil Nadu Transport Commissioner

 

இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்கும் வகையில் வாகன விற்பனையாளர்களை அறிவுறுத்த வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னால் வரும் வாகனங்களைக் கண்காணித்து வாகனங்கள் இயக்க ஏதுவாக கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. ஆனால், இருசக்கர வாகனங்களில் இந்தக் கண்ணாடிகள் அகற்றப்படுவதாகவும், அதனால் விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 

அந்த மனுவில், தமிழ்நாடு மாநில மோட்டார் வாகனச் சட்டப்படி, கண்ணாடி இல்லாமல் இருசக்கர வாகனங்கள் இயக்குவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. மேலும், இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை அகற்றினால், வாரண்டி கிடையாது என நுகர்வோரை எச்சரிக்கும்படி, வாகன விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தேவைப்பட்டால், இதுசம்பந்தமாக வாரண்டி விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களையும் அறிவுறுத்தலாம் எனத் தெரிவித்து நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்