தமிழக அரசு எடுத்துவரும் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார். மேலும் பொது முடக்கக்காலத்தில் தமிழக அரசால் செய்யப்பட்ட பணிகளையும் அறிக்கையில் முதல்வர் பட்டியலிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தாண்டு ஜனவரி முதல் முனைப்புடன் செயல்பட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டேன். நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழ்நாட்டின்தான் அதிகம். உயிரிழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில்தான் மிகக்குறைவு.
ஜூன் 4- ஆம் தேதி வரை தமிழகத்தில் 5.50 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக 72 மையங்களில் தினமும் சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் நோய் பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது. வீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும் மக்கள் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கைகழுவ வேண்டும்.
மேலும், பொதுமக்கள் கூடுமானவரை தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடித்தும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும், உணவு பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா வைரஸ் நம் இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு பொருளாதாரத்தையும் பாதித்துவிட்டது. தமிழகத்தை முக்கிய உற்பத்தி மையமாக உருவாக்க சிறப்பு முதலீட்டு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.