சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு அதிகாரி சித்திக் ஐ.ஏ.எஸ்., "சென்னையில் சுனாமி போல் கரோனா பரவி வருகிறது. விருந்தினர்களையும், கூட்டமாகக் கூடுவதையும் தவிருங்கள்; மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சென்னையில் கரோனா அதிகரித்துள்ள நிலையில், 25 ஆயிரம் பேர் அவரவர் வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் ஒருநாளைக்கு 25 ஆயிரம் கரோனா பரிசோதனைகளை செய்து வருகிறோம். சென்னையில் ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சரி செய்வதற்கானப் பணிகளை விரைவுப்படுத்தி உள்ளோம். ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் 10 நாட்களில் ஆக்சிஜன் படுக்கை வசதிககளை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தொற்றுக்கு ஆளானவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தக் கூடாது; மக்கள் பதற்றமடையத் தேவையில்லை; ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் முதற்கட்டமாக 250 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்க உள்ளோம். ஏற்கனவே 12 ஸ்கிரீனிங் மையங்கள் உள்ள நிலையில், மேலும் 9 மையங்கள் அமைக்க உள்ளோம். அரசு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்தப் பெரிய அலையை ஒழிக்க முடியும்" என்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "இரு கரோனா தடுப்பூசிகளும் பாதுகாப்பானவையே. மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான முன்பதிவில் சிறு சிறு தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளன. அவை சரிசெய்யப்பட்டதும் எத்தனை பேர் பதிவு செய்துள்ளார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படும். வட மாநிலங்களைப் போல் சென்னையில் கரோனாவால் இறப்போர் விகிதம் கிடையாது" எனத் தெரிவித்தார்.