தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜுலை 5- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது பற்றி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (02/07/2021) ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை (02/07/2021) காலை 11.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் குழு, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை டி.ஜி.பி. முனைவர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், 11 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு புதிய தளர்வுகள் குறித்த அறிவிப்பை நாளை (அல்லது) நாளை மறுநாள் தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.