
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள வெள்ளிமேடுபேட்டையில் உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பனின் மகன் மணிகண்டன் வயது 27. இவர் தந்தை கன்னியப்பன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் மணிகண்டன் தனது தாய் ஜெயலட்சுமி உடன் சென்னை குன்றத்தூர் பகுதியில் வசித்துவருகிறார்.
மேலும், அவர் அப்பகுதியில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். கரோனா பரவல் காரணமாக மணிகண்டன் சில மாதங்களாக தனது சொந்த ஊரான நடுவனந்தல் கிராமத்திற்கு வந்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு மணிகண்டனின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது மணிகண்டன் வீட்டுக்குள் இருந்து “ஐயோ என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று கத்தி சத்தம் போட்டுள்ளார்.
இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரின் வீட்டின் சுவரை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டுக்குள் மணிகண்டன் கட்டிப் போடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரது கட்டுக்களை அவிழ்த்து, அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதற்கிடையே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து வீரர்கள் தீயை அணைத்தனர்.
வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து போயின. இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அப்போது மணிகண்டன் 4 பேர் கொண்ட கும்பல் தன்னை வீட்டுக்குள் கட்டிப் போட்டுவிட்டு, வீட்டில் இருந்த ரூ.15 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி போகும்போது வீட்டுக்கு தீவைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது மணிகண்டன் மீதே போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது மணிகண்டன் யாரும் என்னை கட்டிப் போட்டு பணத்தை கொள்ளை அடித்து செல்லவில்லை. வீட்டுக்கும் தீ வைக்கவில்லை எனக்கும் என்னுடைய சித்தப்பா ஏழுமலைக்கும் நிலப்பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது. இதில் ஏழுமலை குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கத்தில் தன்னைத்தானே கட்டிப் போட்டுக் கொண்டு தனது வீட்டுக்குத் தானே தீ வைத்து கொண்டு நாடகமாடியதாக மணிகண்டன் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து மணிகண்டன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட மணிகண்டனின் செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.