தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள உடையாளூர் தொடக்க வேளாண்மைகூட்டுறவு கடன் சங்க தேர்தலில் அதிமுகவும், அமமுகவும் கூட்டணி அமைத்துக்கொண்டது தஞ்சை அரசியல் வட்டத்தில் பரபரப்பாகியுள்ளது.
இதுகுறித்து விசாரித்தோம், "கும்பகோணம், திருவிடைமருதுார் கூட்டுறவு சங்கங்களில் இயக்குனருக்கான தேர்தல் நடத்தவேண்டும் என அறிவித்து, கடந்த 2018 ம் ஆண்டு, மார்ச் மாதம் 26 ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது கூட்டுறவு சங்கத்தில் உள்ள திமுகவினரின் வேட்புமனுவை நிராகரித்து விட்டு, அதிமுகவினர் போட்டியின்றி தேர்வானார்கள் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து திமுகவினர், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தீர்ப்பில், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 11 இயக்குனர்களுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்றது.
அந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக மற்றும் அமமுகவினர் நேரடியாக போட்டியிட்டனர். அப்போது அமமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் நேரடியாக போட்டி எழுந்ததால் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய பதவிகளைக்கைப்பற்ற கடும் போட்டியும், வாக்குவாதமும் எழுந்தது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக முற்றி கல் வீச்சு கலவரம் வரை சென்றது. கலவரத்தைக் கட்டுப்படுத்த வந்த போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டுறவு சங்கத் தேர்தல் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் 3 ம் தேதி உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கத்திற்கும், வரும் 6 ம் தேதி மருதாநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க அதிமுகவும், அமமுகவும் நேரடியாக உடன்பாடு செய்துகொண்டனர்.
கூட்டணி உடன்படிக்கையின்படி ஏற்கனவே போட்டியிட்ட 11 இயக்குநர்களில் அதிமுகவினர் 6 பேரும், அமமுகவினர் 5 பேரும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர். வெற்றி பெறும் இயக்குநர்கள் வரும் 9 ம் தேதி நடைபெறும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை அதிமுகவும், அமமுகவும் பகிர்ந்துகொள்ள ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது". என்கிறார்கள்.
கல் வீச்சு வரை சென்ற உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் அதிமுகவினரும், அமமுகவினரும் பகிர்ந்து கொண்ணடதால் திமுகவினருக்கு இயக்குனர்கள் பதவிகள் கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும், அமமுக இணையப்போவதாக கிளம்பி வரும் செய்திகளுக்கு இந்த தேர்தல் வலுசேர்த்துள்ளது என்கிறார்கள் குடந்தைவாசிகள்.