Skip to main content

அள்ளிக்குவிக்கும் தனியார் பள்ளிகள்... கண்டு கொள்ளாத மாவட்ட கல்வித்துறை!

Published on 24/06/2020 | Edited on 24/06/2020

 

coronavirus lockdown privates schools parents

 

அடுத்து எப்பொழுது கல்விக்கூடங்கள் திறக்கும்..? என்பதனை அரசு அறிவிக்கும் முன்னரே, மாவட்ட கல்வித்துறையிலுள்ள சில அதிகாரிகளின் துணைக் கொண்டு புதிய கல்வியாண்டிற்கான (.?) மாணக்கர்கள் சேர்க்கையை துவக்கிய தனியார் பள்ளிகள், பழைய மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தையும் மிரட்டியே வசூலிப்பது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டத்தினைப் பொறுத்தவரை சிவகங்கை கல்வி மாவட்டம் எனவும், தேவக்கோட்டை கல்வி மாவட்டம் எனவும் நிர்வாக ரீதியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஒட்டு மொத்தமாக 206 அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளான மெட்ரிக் பள்ளிகள் சுமார் 60- ம், சிபிஎஸ்இ பள்ளிகள் 15- க்கு மேற்பட்டும் இயங்கி வருகின்றன. 

 

கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25 முதல் பொது ஊரடங்கு அறிவிக்கப்ப்ட்டு அனைத்து பள்ளிக்கல்வி நிலையங்களுக்கும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டது. நடைமுறையில் சில தளர்வுகளுடன் இருக்கும் இந்த ஊரடங்கில் பள்ளிக்கல்வி நிலையங்கள் திறப்பு எப்போது என்பது.? இன்று வரை அறிவிக்கப்படவில்லை. இதனிடையே அரசு அறிவிக்காதவரை பள்ளிக்கான கல்விக்கட்டணங்களை வசூலிக்கக் கூடாது. அதுவும் நிலுவையில் இருக்கும் கட்டணங்களைக் கூட வசூலிக்கக்கூடாது என அரசு அறிவித்ததோடு மட்டுமில்லாமல், கரோனா வைரஸின் வீரியத்தை உணர்ந்து பத்தாம் வகுப்பிற்கான தேர்வுகளை ரத்து செய்து ஆல்பாஸ் என அறிவித்தது.

coronavirus lockdown privates schools parents

 

ஆனால், அரசின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தேவக்கோட்டை கல்வி மாவட்டத்திலுள்ள காரைக்குடி நகரிலுள்ள சில தனியார் பள்ளிகள், குறிப்பிட்ட நாளில் பெற்றோர்களை வரவழைத்து கரோனா காலத்து சமூக விலகலைப் பின்பற்றாமல் புதிய மாணாக்கர்களின் சேர்க்கையை நடத்திக் கல்லாக் கட்டி வருகின்றது. இதற்காக தினசரி செய்தித்தாளில் தங்களது பள்ளி விளம்பரங்களை வைத்து ஆள் பிடித்து வருவதும் காணக்கூடிய ஒன்றே.! இதே வேளையில், இந்த வருடத்திற்கான கட்டணம் இது.! உடனடியாக கட்ட வேண்டுமென உளவியல் ரீதியாக குறுந்தகவல் அனுப்பி பெற்றோர்களின் மனநிலையை சிதைக்கும் பள்ளிகளும் உண்டு.

 

"இந்த வகுப்பிற்கு இவ்வளவு பள்ளிக்கட்டணம்? இவ்வளவு,புத்தகக்கட்டணம்? என ஒவ்வொரு வகுப்பிற்கும் கட்டணத்தை நிர்ணயித்து எங்களின் மொபைல் எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் குறுந்தகவல் மூலம் செய்தி அனுப்பி கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்துகின்றன பள்ளிகள். அரசு இன்னும் அறிவிக்கவில்லையே.. நீங்கள் கட்டணத்தை செலுத்தக் கூறுகிறீர்கள்.? எனக் கேள்வி எழுப்பினால். "இந்த வருசம் உங்க புள்ளை இங்க படிக்கலையா..? என உளவியல் ரீதியாக பயமுறுத்துகின்றனர். மாவட்ட கல்வித்துறையின் ஆசியில்லாமலா இது போன்று நடைபெறும்.?" என கேள்வி எழுப்புகின்றனர் பெற்றோர்கள்.

 

இதுக்குறித்து கருத்தறிய சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலு முத்துவைத் தொடர்பு கொண்ட போது, "ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளேன். மீறும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை உண்டு." என்றார் அவர்.

 

சார்ந்த செய்திகள்