Skip to main content

காத்திருந்த நீதிபதி, நிர்மலாதேவி... அரசு வழக்கறிஞர் வராத காரணம் 

Published on 03/11/2018 | Edited on 03/11/2018

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, வழக்கு விசாரணைக்காக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். நேற்று முன்தினம் அவர் நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட போது, நாம் அவரைப் பின்தொடர்ந்து கேள்விகள் கேட்டோம். எதுவும் பேசவில்லையென்றாலும் நம்மைத் திரும்பிப் பார்த்த நிர்மலாதேவியின் முகத்தில் பல உண்மைகளை சொல்ல வேண்டுமென்ற தவிப்பு இருந்தது. செய்தியாளர்கள் அவரை நெருங்குவதைத் தவிர்ப்பதற்காக நீதிபதிகள் மட்டுமே பயன்படுத்தும் பாதையில் அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.


நீதிமன்றத்துக்கு நீதிபதியும் குற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவியும் வந்த பிறகு நெடு நேரமாகியும் அரசு சார்பில் வாதாடும் அரசு துணை வழக்கறிஞர் (Assistant Public Prosecutor) மலர்விழி வராததால் விசாரணை தொடங்காமல் நெடுநேரம் தள்ளிப்போனது. என்ன காரணம் என்று விசாரித்தபோது வழக்கறிஞர் மலர்விழியின் தந்தையின் நினைவு நாள் இன்று என்பதால், அதற்காக சாமிகும்பிட்டுவிட்டு வருவதால் தாமதமாக வருவார் என்று கூறினார்கள்.

நீதிமன்றத்தில் காத்திருந்த நிர்மலாதேவி வறண்ட, வெறித்த பார்வையுடன் தாடையை தேய்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார். வந்த சில நொடிகளிலேயே பல முறை கொட்டாவி விட்ட அவர், இரவெல்லாம் விழித்திருந்த களைப்பில் இருப்பது தெரிந்தது. கல்லூரியில் மிகவும் கலகலப்பான பெண்ணாக அனைவரிடமும் பேசுபவராம் நிர்மலாதேவி. அவரை அழைத்து வந்த காவலர்கள் நீதிமன்றத்தில் சிரித்துப் பேசியபடி இருக்க, அவர் ஏதோ ஒரு வலையில் சிக்கிய உணர்வில் அமைதியாக அமர்ந்திருந்தார்.        

 

 

 

சார்ந்த செய்திகள்