Skip to main content

அமெரிக்க ‘தமிழர் விழா ’வில் மு.க.ஸ்டாலின் மற்றும் மா.ஃபா. பாண்டியராஜன்....

Published on 20/06/2018 | Edited on 20/06/2018

அமெரிக்காவில் விமர்சியாகக் கொண்டாடப்படவிருக்கும் தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் கலந்து கொள்ள அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவிருக்கிறார் திமுக செயல் தலைவரும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின். இந்த விழாவில், ஆளும் கட்சி சார்பில் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் கலந்து கொள்வது தமிழ் உணர்வாளர்களால் ஆரோக்கியமாகப் பார்க்கப்படுகிறது.  

 

stalin


 

அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்துச் செவ்வனே செயல் பட்டுக்கொண்டிருக்கிறது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை.  அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பாக இயங்கி வருகிறது இப்பேரவை. உலகத் தமிழர்களையும் தமிழ்ச்சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாகவும் இப்பேரவை செயலாற்றிக் கொண்டிருக்கிறது.


அந்த வகையில், ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, உலக நாடுகளின் பல்வேறு அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றதாகும். அமெரிக்கத் தமிழர்களிடமும் உலகத்தமிழர்களிடமும் தமிழ் மொழியின் கலையையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முகமாக இன உணர்வுகளை வளர்த்து வருகிறது பேரவை’ என்கிறார்கள் தமிழ்த் தேசியத் தலைவர்கள்.

 

 


பேரவை ஆரம்பித்து 30 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் 31-வது ஆண்டு துவக்க விழாவை வருகிற ஜூன்-29, ஜூன்-30, ஜூலை-1 ஆகிய மூன்று நாட்கள்  நடத்துகின்றனர். டெக்சாஸ் மாநிலத்திலுள்ள டல்லாஸ் நகரத்திலிருக்கும் ப்ரிஸ்கோ என்கிற இடத்தில், தமிழர் மரபு, மகளிர், மழலை எனும் தலைப்பில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் அமெரிக்காவில் குவியவிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதல் நாள் விழாவாக அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் மாநாடும், இரண்டாம் நாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பங்குப் பெறும் இயல், இசை, நாடக நிகழ்ச்சிகளும், மூன்றாம் நாள் இந்திய-தமிழக அரசியல், கலை, சமுதாய நலன் சார்ந்த விவாதங்களும் நடைபெறவிருக்கின்றன.

 

 


ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சிக்கான ஒரு மையப்பொருளை எடுத்தாள்வது விழாவின் நோக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு, ‘ செம்மொழி இருக்கைச் செய்வோம் ; செம்மொழி சிறக்கச் செய்வோம் ’ எனும் மையக்கருத்துடன் விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். தாய்த்தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் தம் நல்வாழ்விற்கும் உழைத்திட்டப் பெருமக்களை, நினைவு கூர்ந்து சிறப்புச் செய்வது பேரவையின் வழக்கம். இந்தாண்டு அந்நிய மண்ணில் இன வெறிக்கு எதிராகப் போராடிய இரும்பு மங்கை தில்லையாடி வள்ளியம்மையின் 120-ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் ஈழத்தந்தை செல்வாவின் 120-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையும் சிறப்பிக்கவிருக்கிறார்கள்.


பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவேல் வேள்நம்பி, ‘ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொள்ளும் விழாவாக நடைபெறவிருக்கிறது தமிழர் விழா. தமிழகத்திலிருந்து அரசியல் தலைவர்கள், கலை மற்றும் மருத்துவம் சார்ந்த பிரபலங்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், திரைப்பட பிரபலங்கள் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர். இனம் மற்றும் மொழியின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் இந்த விழாவில் விரிவாக விவாதிக்கப்படும்’ என்றார்.

 

 


இவ்விழாவில் கலந்துகொள்ளத்தான் அடுத்த வாரம் மு.க.ஸ்டாலின், மாஃபா பாண்டியராஜன் அமெரிக்கா செல்கின்றனர். மேலும் இவ்விழாவில் வேலூர் பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், பேராசிரியர் ஞானசம்மந்தன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், வழக்குரைஞர் அருள்மொழி, ஐசரிகணேஷ், நடிகர் கார்த்திக், பாடகர், பாடகிகள், இசைக் கலைஞர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர். பேரவையின் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக, தமிழர்கள் பெரிதும் போற்றும் தை மாதத்தை, ‘தமிழ் மரபு மாதம்’ என அறிவித்துள்ளது அமெரிக்க அரசாங்கம். தமிழுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம் என்றனர் விழாக்குழுவினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்