
‘கரோனா பீதியில் அமைச்சர்கள்!’என்று நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறோம். அதனைப் படித்துவிட்டு “அப்படியெல்லாம் கிடையாது..” என்று மறுத்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, “பொது வாழ்க்கைக்கு வந்தாச்சு. எந்நேரமும் கரோனாவுக்கு பயந்துக்கிட்டே இருந்தால், ஒரு அமைச்சரா இருந்து மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளைச் செய்ய முடியாமல் அல்லவா போய்விடும்? கரோனா விழிப்புணர்வும்,‘தனித்திரு, விலகியிரு, வீட்டிலிரு..’என்று முதலமைச்சர் எடப்பாடியார் சொன்னபடி நடந்துகொள்வதும், பொதுமக்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்தான்.
அதற்காக, அமைச்சர்கள் வீட்டிலேயே இருக்க முடியுமா? இன்றுகூட, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தில், நேருகாலனியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், சமுதாயக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அடுத்தடுத்து நிழற்குடை கட்டடங்கள், கலையரங்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகள் இருக்கின்றன.” என்றார்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை பின் தொடர்ந்தோம். சமுதாயக் கட்டட அடிக்கல் நாட்டும் இடத்துக்கு அவர் காரில் வந்து இறங்கியதும், பொதுமக்கள் சூழ்ந்துகொண்டனர். நெருக்கத்தில் நின்று பேசினார்கள். சால்வையெல்லாம் அணிவித்தனர். அமைச்சரால், கறாராக மக்களை விலகியிருக்கச் சொல்ல முடியவில்லை. மாஸ்க் அணிந்தாலே போதும் என்ற மனநிலைக்கு அமைச்சரே வந்துவிட்டார் போலும்.

இத்தனைக்கும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் நேர்முக உதவியாளரும், கார் டிரைவரும் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் கூட, ரத்தமாதிரிகள் எடுக்கப்பட்டு, கரோனா பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார். நெகடிவ் ரிசல்ட் வந்து கரோனா இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார்.
அமைச்சரை நெருங்குவதும், பொது இடத்தில் அவரைச் சூழ்ந்துகொள்வதும், பொதுமக்களுக்கு மட்டுமல்ல, அமைச்சருக்கும் ‘ரிஸ்க்’ ஆனதுதான்!