மரணத்தின் வாயிலாக வந்து விட்ட இந்தக் கரோனா வைரஸ் இந்தியா மட்டுமில்லாமல் உலக முழுக்க உள்ள மனித குலம் கதறிக் கொண்டிருக்கிறது.
இந்திய அளவில் தமிழகம் இதன் தாக்கத்தில் இரண்டாவது இடமாக உள்ளது. அதே போல் அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்களில் ஈரோடும் ஒன்று. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று ஈரோட்டில் அனைத்து வீதிகளிலும் ராட்சத இயந்திரத்தின் மூலம் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது. இதைத் தொடங்கி வைத்த ஈரோடு கலெக்டர் கதிரவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவாமல் இருக்கத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.தனி மனித இடைவெளி என்கிற சமூக இடைவெளியையும் மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
ஈரோட்டில் இதுவரை கரோனா வைரஸ் உறுதியானவர்கள் மொத்தம் 28 பேர். இவர்கள் அணைவரும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் நான்கு பேர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்தக் கணக்குப்படி ஈரோட்டில் கரோனா வைரஸ் உறுதியானவர்கள் மொத்தமாக 32 பேர்,மேலும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமணையில் இருந்து சிகிச்சை பெற்றவர்களில் 46 நபர்களுக்கு கரோனா வைரஸ் இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது.மேலும் மருத்துவமனையில் உள்ள 15 நபர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அவர்களுக்கு இருக்கிறதா என்பது ரிசல்ட் வந்தால் தான் தெரியும்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்கள் மூலம் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என 29 ஆயிரத்து 834 குடும்பங்கள், மொத்தமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 737 பேர் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வீட்டுக்கே கொண்டு சென்று கொடுத்து வருகிறோம். மேலும் தற்போது இந்த ராட்சத கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம் 35 லட்சம் ரூபாய் விலையில் வாங்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்தின் மூலம் இந்த இயந்திரம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து வாங்கப்பட்டு மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ள இடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் இப்போதைய நிலைமையில் இன்னும் 15 பேருக்கு மட்டும் வைரஸ் தொற்று உள்ளதா என முடிவு வர வேண்டி உள்ளது என்றார்.