Skip to main content

‘பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிப்பு’ - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!

Published on 20/10/2024 | Edited on 20/10/2024
Pollution Control Board  announcement for diwali time restriction

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி (31.10.2024) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் சரவெடி உள்ளிட்ட பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும்.

குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதியும் விடுமுறை எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி அரசு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது. தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்லும் மக்கள் ஊர் திரும்ப அவகாசம் தரும் வகையில் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் வியாழன் (தீபாவளி நாள்), வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. அதே சமயம் நவம்பர் 1ஆம் தேதி விடுமுறையை ஈடுகட்ட நவம்பர் 9ஆம் தேதியை வேலைநாளாக இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்