உலகமே கரோனா தொற்று காரணமாக தள்ளாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் அதன் தாக்கத்தின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதிலும், அதிகாரிகள் பணியாளர்கள் தடுப்பு பணிகளில் தொய்வின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் தூத்துக்குடி எம்.பி.யான தி.மு.க.வின் கனிமொழி தன்னுடைய தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கரோனா தொற்றுப் பணி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்.
இன்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த கனிமொழி எம்.பி. அங்கு அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டைப் பார்வையிட்டார். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு தலைமை மருத்துவர் பொன்.ரவியிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து திருச்செந்தூர் பேரூராட்சி, உடன்குடி, மற்றும் ஆறுமுகநேரி பேரூராட்சிகளுக்குச் சென்ற கனிமொழி மூன்று பேரூராட்சிகளிலும் துப்புறவு பணியாற்றிவரும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு தலா 25 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், முகக் கவசம், கையுறை போன்றவைகளை வழங்கி அவர்களிடம் பேசினார்.
இது போன்ற பகுதிகளில் கனிமொழி ஆய்வு செய்தபோது உடன் தொகுதியின் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வும், மா.செ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் சென்றனர். நாளை தொகுதியின் பிற பகுதிகளுக்கு எம்.பி. கனிமொழி செல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.