ஈரோடு மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை இன்று (08/02/2021) செய்தியாளர்களைச் சந்திதார்.
அப்போது அவர் கூறியதாவது, "பாரதிய ஜனதா அரசு 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க பட்ஜெட். கரோனாவால் இழந்த பொருளாதாரத்தை மத்திய அரசு மீட்டுவருகிறது. இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு ரூபாய் 63 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 ஜவுளி பூங்கா அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் இரண்டு ஜவுளி பூங்காக்கள் வர உள்ளது. அதில் ஒன்று ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டுவர முயற்சி செய்வோம். மருத்துவத்திற்கும் இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. அடுத்ததாக இரண்டு மருந்துகள் வர உள்ளது. இதற்காக மேலும் நிதி ஒதுக்கப்படும். சுயசார்பு இந்தியாவுக்காக, இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா அரசு கரோனாவை வெற்றிகரமாகக் கையாண்டது.
சிறையில் உள்ள 7 பேர் விடுதலையைப் பொறுத்தவரை, இது சாதாரண வழக்கு அல்ல. சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு மாநில ஆளுநர் வேகமாக முடிவு அறிவிக்கவேண்டும் என்று கூறியது. அதற்கு ஆளுநர் கலந்தாலோசித்து குடியரசுத் தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆளுநர் காலதாமதம் செய்ததாகக் கூற முடியாது. அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். தமிழர்கள் என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பார்க்கக் கூடாது. தமிழ்நாட்டிற்கு கரோனா காலகட்டத்தில் மத்திய அரசு ரூபாய் 3 லட்சம் கோடி வழங்கியுள்ளது.
சசிகலா தமிழகம் வருகையால் அரசியலில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு, நாங்கள் அ.தி.மு.க. கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம். அவர் தண்டனை முடிந்து வருகிறார். அவர்கள் கட்சிக்குள் உள்ள குழப்பங்களை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள். எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கக் கூடாது" என்றார்.