கரோனா தாக்கத்தால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே வரலாம் என அரசு கூறியுள்ளது. அதனை காரணம் காட்டி இளைஞர்கள் பலர் தங்களது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சுற்றுகின்றனர். இதனை ஊரடங்கு தொடங்கிய மார்ச் 25ந் தேதியில் இருந்து காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
பின்னர் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றிக்கொண்டு இருந்தவர்களை நோக்கி லத்தியை சுழற்ற தொடங்கியுள்ளது போலீஸ்.
இருசக்கர வாகனத்தில் சாலையில் வந்தாலே ஏன் வருகிறார்கள், எதற்காக வருகிறார்கள் என அறிந்துக்கொள்ளாமல் பெரும்பாலான போலீஸார் அடித்து துவைக்கிறார்கள்.
சில மாவட்டங்களில் சில அதிகாரிகள் வாகனம் ஓட்டி வருபவர்களிடம், இது தவறு, இப்படி வெளியே சுற்றாதீர்கள் என கையெடுத்து கும்பிட்டு அறிவுரை சொல்லி பின்பு எச்சரித்தும் அனுப்புகிறார்கள். பெரும்பாலான இடங்களில் விசாரணையே கிடையாது முதலில் லத்தியால் நாலு அடி அடித்துவிடுவது, பின்பு எதற்காக வெளியே வந்தாய் என விசாரிப்பதை வாடிக்கையாக்கி உள்ளனர் சிலர்.
அதுமட்டும் இல்லாமல் எதற்காக வெளியே வந்தோம் என பதில் சொல்ல முடியாமல் தவிப்பவர்களை தோப்புக்கரணம் போடவைப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது, வழக்கு போடுவது என்கிற செயல்களில் ஈடுப்படுகின்றனர் காவல்துறையினர். இதுவே சரியான நடைமுறை. இதனை இரண்டு நாளைக்கு தொடர்ந்து செய்தாலே யாரும் வெளியே வரமாட்டார்கள். அப்படி பெரும்பாலும் செய்வதில்லை.
சென்னையில் ஒரு மருத்துவர் மருத்துவனைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவரை மடக்கிய ஒரு காவல்துறை ஆய்வாளர் அவரது வண்டியை நிறுத்தி லத்தியால் அடித்தார். அவர் பதறி நான் மருத்துவர் என்றபின், அதை முதலில் சொல்லக்கூடாதா என கேட்டுவிட்டு, மன்னிப்பு கூறி அனுப்பினார். இது ஒரு உதாரணம் தான். இப்படி மருந்துக்கடை உரிமையாளர், ஊடகத்துறையினர் என ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களையும் தாக்குகிறது போலீஸ். கேள்வியே கேட்காமல் அடித்துவிட்டு பின்பு முதலிலேயே சொல்ல வேண்டியது தானே எனக்கேட்பது எந்த விதத்தில் நியாயம்?
அடித்துவிட்டு விசாரிப்பதற்கு பதில் விசாரித்துவிட்டு காரணமே இல்லாமல் வெளியே வருபவர்களை அடிக்கலாம். அதைவிட்டுவிட்டு எடுத்ததும் அடிப்பேன் என்பது என்ன நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர்.
உயிர் பயம் அனைவருக்கும் இருக்கிறது. அப்படியிருக்கும் போது தேவையில்லாமல் யாராவது வெளியே வருவார்களா? அத்தியாவசிய தேவையான காய்கறி, மளிகை, மருந்துக்கடைக்கு வாங்க வருபவர்களையும் தாக்குவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர் மக்கள். நோய் அச்சத்தை விட இவர்கள் நடந்துக்கொள்ளும் முறையே அச்சமாக இருக்கிறது என்று காவல்துறையினரின் செயல்பாடுகளுக்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.