குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை (போக்சோ சட்டம்) விசாரிக்க நாடு முழுவதும் 389 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. சேலத்தில் விரைவில் புதிய போக்சோ நீதிமன்றம் செயல்படுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகின்றன. பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் என வரையறுக்கப்படுகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான குற்றங்கள் பெருகி வருகின்றன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புரிந்தவர்கள் மீது போக்சோ எனும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த சட்டம், கடந்த 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தின் படி, சிறுமிகளை உள்நோக்கத்துடன் தொடுவது, சீண்டுவதும் கூட குற்றம் என்று பிரிவுகள் 7 மற்றும் 8 கூறுகிறது. இதுபோன்ற குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம்.
நாடு முழுவதும், 1.66 லட்சம் போக்சோ வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதையடுத்து, போக்சோ வழக்குகளில் விரைவான விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, எங்கெங்கெல்லாம் 100 மற்றும் அதற்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் தலா ஒரு சிறப்பு போக்சோ நீதிமன்றம் துவக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் தேவையான அளவுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை துவக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
நாடு முழுவதும் முதல்கட்டமாக 389 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னை, கடலூர், கோவை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர், நாகை, சேலம், சிவகங்கை ஆகிய 16 மாவட்டங்களில் இச்சிறப்பு நீதிமன்றம் துவக்கப்பட உள்ளது.
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், மகளிர் நீதிமன்றத்தின் மேல் மாடியில் உள்ள ஓர் அறையில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்படுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. வரும் ஜனவரி மாத இறுதிக்குள் இந்த சிறப்பு நீதிமன்றம் முழுமயை£க செயல்படும் எனத்தெரிகிறது.
போக்சோ நீதிமன்றங்களில் அரசுத்தரப்பில் பெண் வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.