கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ராமநத்தம், ஆவினன்குடி ஆகிய காவல் நிலைய பகுதியில் உள்ள கிராமங்களில் தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். உதாரணமாக திட்டக்குடி அடுத்த நிதி நத்தம் கிராமத்தில் திருடர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி அந்த ஊரில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றனர்.
மே 1 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் அங்கு சுற்றித் திரிந்த 6 மர்ம நபர்களைப் பொதுமக்கள் சுற்றி வளைத்துப் பிடித்து ஆவினன்குடி போலீசில் ஒப்படைத்தனர். எட்டாம் தேதி மினிடோர் வண்டி எடுத்துச் சென்று அந்த ஊரில் உள்ள மாடுகளைக் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் மாடுகளைத் தேடிவந்த கொள்ளையர்களைத் துரத்திப் பிடிக்க முயன்றனர். கொள்ளையர்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பி ஓடிவிட்டனர்.
ராமநத்தம் அருகே கீழக்கல் பூண்டியில் வீடு புகுந்து கொள்ளையடித்துள்ளனர். கண்டமத்தானைச் சேர்ந்த ஆசிரியை பட்டப்பகலில் பள்ளி முடிந்து டூவீலரில் செல்லும் போது அவரது கழுத்தில் இருந்த செயினை அறுத்துச் சென்றனர். திட்டக்குடி டவுனில் உள்ள முக்களத்தி அம்மன் கோயில் அருகேயுவுள்ள ஒரு வீட்டில் வீடு புகுந்து கொள்ளையடித்துள்ளனர்.
இப்படிக் கரோனாவைப் பயன்படுத்தி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் நிதிநத்தம் கிராமத்தில் அடுத்தடுத்த திருட்டு சம்பவங்கள் அவ்வூர் மக்களின் தூக்கத்தையும் நிம்மதியையும் கெடுத்துள்ளது. இப்படி சுமார் 20 திருட்டு சம்பவங்கள் இப்பகுதியில் நடந்துள்ளன. ஆனால் அதில் இரண்டொரு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட திருடர்களை மட்டுமே போலீஸ் கைது செய்துள்ளது.
கரோனாவைக் கண்டு மக்கள் பயந்து நடுங்குகிறார்கள். ஆனால் திருடர்கள் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இப்பகுதியில் அதிகரித்துள்ளன. காவல்துறை கொள்ளையர்களை எப்போது பிடிக்குமோ, எங்களுக்கு எப்போது நிம்மதி திரும்புமோ? என்று புலம்புகிறார்கள் கிராம மக்கள்.