விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள செங்கமலப்பட்டியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தப் பட்டாசு ஆலையில் பல்வேறு ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆலையில் ஆண் மற்றும் பெண் எனப் பலரும் பணிபுரிந்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் அதிகப்படியான வெப்பத்தால் பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வு ஏற்பட்டு ஆலையில் நேற்று (09.05.2024) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் சிக்கி ஒரு பெண் உட்பட 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் தங்களது இரங்கல் மற்றும் ஆறுதல்களை தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் மீது பட்டாசு ஆலையில் அஜாக்கிரதையாகச் செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, வெடி பொருட்களை முறையாக கையாளத் தவறியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாகவுள்ள ஆலை உரிமையாளர் சரவணன் மற்றும் ஒப்பந்ததாரர் முத்து கிருஷ்ணனையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.