மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்கு, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, எனப் பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களைப் பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 22ஆம் தேதி, நடந்த நிகழ்வில், 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது. ஆனால் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று (09.05.2024) பத்ம விருதுகள் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பத்ம விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கினார். அப்போது விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது, வழங்கப்பட்டது. அவர் சார்பில் பிரேமலதா விஜயகாந்த் விருதினை வாங்கினார். அந்த நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் கலந்து கொண்டார். மேலும் சிரஞ்சீவிக்கு பத்ப விபூஷன் விருதும் வழங்கப்பட்டது.