சிவகாசி ஸ்ரீசுதர்ஸன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார். மேலும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால், குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, அத்தகையோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணன் மற்றும் மேற்பார்வையாளர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, வெடிபொருட்களை முறையாகக் கையாளாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தியை மேற்பார்வையிடும் ஃபோர்மேன் மாற்றுத்திறனாளியாக இருக்க முடியாது என்று இந்திய அரசிதழின் (வெடிபொருள் சட்டம்) 246-வது பக்கத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசுதர்ஸன் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சரவணன், இடுப்புக்கு மேல் செயல்பட முடியாத ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், பட்டாசு ஆலை நடத்துவதற்கான உரிமம் பெறுபவர் மாற்றுத்திறனாளியாக இருக்கலாமா? கூடாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.