மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல்முறையாக நெல்லை மாவட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தைச் சொல்லி திட்டுவது, கேவலப்படுத்துவது, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016, பிரிவு 92(a)ன்படி தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. பிரிவு 92(d)ன்படி இரண்டு ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. ஆனால், சட்டம் அமலுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் ஆங்காங்கே குற்றங்கள் நடநதாலும் வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி காவல் நிலையத்தில் கடந்த வாரத்தில் ஜன-4 ஆம் தேதி இந்த முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் கௌரவ விரிவுரையாளராக பணிபுரியம் முனைவர். பெரியதுரை அவர்களை ஒரு வழக்கு விசாரணையில் காவல்நிலையத்தில் வைத்து, மற்றவர்கள் முன்னிலையில் ஊனத்தைச் சொல்லி திட்டியதற்காக முன்னாள் காவல் ஆய்வாளர் சிதம்பரம் என்பவர் மீதே இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது." வழக்கு பதிய உத்தரவிட்ட சேரன்மாதேவி ஏ.எஸ்.பி.க்கு பாராட்டுக்களை தெரிவித்துவிட்டு, "குற்றவாளிக்கு விரைந்து தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை." என்கின்றனர் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தினர்.