விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியைச் சேர்ந்த ரமேஷ் சில வருடங்களுக்கு முன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய ரூ.50 லட்சம் மதிப்பிலான முடி மூட்டைகள் திருடப்பட்ட வழக்கில் கைதானார். ‘போயும் போயும் முடியைத் திருடி வழக்கில் சிக்கி கைதானாமே..’ என்று புலம்பிய ரமேஷ், மாற்று வழியில் யோசித்ததுதான், போலி வருமானவரித்துறை அதிகாரி வேடம். யார் யாரை ஏமாற்றி பணம் பறிக்கலாம் என்று மூளையைக் கசக்கியது, கருப்பசாமி, சுப்பிரமணியன், மகேஷ்குமார் உள்ளிட்ட ரமேஷின் நால்வர் டீம்.
விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு கருந்திரி தயாரிப்பவர்கள் கைதாவது உண்டு. ரமேஷ் டீமின் பார்வையில் தாயில்பட்டி – ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த பட்டாசு ஏஜண்ட் சௌந்தரராஜன் சிக்கினார். கடந்த 6 ஆம் தேதி, சௌந்தரராஜனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்த ரமேஷின் டீம் “நீங்க பண்ணுற தொழில் சட்ட விரோதமானது. இதற்கு முறையான வருமானவரி கணக்கு எதுவும் உங்ககிட்ட இல்ல. வருமானவரி வழக்குல இருந்து தப்பிக்கணும்னா ரூ.10 லட்சம் கொடுங்க.” என்று மிரட்டியது. சௌந்தரராஜனும் தயங்காமல் ரூ.10 லட்சம் கொடுத்துவிட்டார்.
போலி அதிகாரிகள் வேடத்துக்கு ஜாக்பாட்டாகக் கிடைத்த ரூ.10 லட்சம், ரமேஷின் டீமை திக்குமுக்காடச் செய்தது. மீண்டும் சௌந்தராஜனிடம்“நீங்க பெரிய அளவுல ஏமாத்தி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திட்டீங்க. எங்ககிட்ட நீங்க தந்த ரூ.10 லட்சம்கிறது ரொம்பவும் குறைவான தொகை. அதனால, இன்னொரு ரூ.10 லட்சம் கொடுங்க. இல்லைன்னா, தப்பிக்கமுடியாது.” என்று மிரட்டினார்கள். மூன்று நாட்களாக நால்வரும் தொடர்ந்து தொந்தரவு செய்த நிலையில், வருமானவரித் துறையினரைத் தொடர்புகொண்டு “என்னங்க.. உங்காளுங்க ரூ.10 லட்சம் வாங்கிட்டு போனாங்க. அப்புறம் திரும்பவும் ரூ.10 லட்சம் கேட்கிறாங்க. இது என்னங்க நியாயம்?” என்று கேட்க, “அப்படியா? எங்க அதிகாரிங்க யாரையும் நாங்க அனுப்பவில்லையே?” என்று கூற, சுதாரித்துக்கொண்டார் சௌந்தரராஜன்.
தன்னை மிரட்டி பணம் பறித்த போலி அதிகாரிகள் குறித்து சிவகாசி டி.எஸ்.பி. அலுவலகத்தில் சௌந்தரராஜன் புகார் அளித்தார். அந்த நான்கு பேரில், சாத்தூர் திமுக இளைஞரணி நிர்வாகியா ரமேஷும், தாயில்பட்டி கோட்டையூர் கிளை திமுக பிரதிநிதியாக கருப்பசாமியும் இருந்ததால், “நாங்கள் ஆளும்கட்சியினர். எங்களுக்கு அவரைத் தெரியும்; இவரைத் தெரியும்..” என்று உதார் விட்டுள்ளனர். இவர்களது குற்றச்செயலை அறிந்த அக்கட்சியின் மேல்மட்ட நிர்வாகி ஒருவர் காவல்துறையினரிடம் “இந்த மாதிரி ஆளுங்க கட்சி பேரை கெடுக்கிறாங்க. இவர்களை புடிச்சி ஜெயில்ல போடுங்க..” என்று டென்ஷனாகி கத்தியிருக்கிறார். இதனையடுத்து சிவகாசி டவுன் காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்து, அந்த நான்கு பேரையும் கைது செய்தது.