சேலம் நாராயண நகர் அருகில் உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற 'பூச்சி' சரவணன் (55). கூலித்தொழிலாளி. சின்னச்சின்ன அடிதடி சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஓர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட பூச்சி சரவணனுக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை நடந்தது. அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென்று தலைமறைவானார். இந்நிலையில் அவர், சேலம் ஆற்றோரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருப்பதாக வெள்ளிக்கிழமை மாலையில் தகவல் கிடைக்க, கிச்சிப்பாளையம் காவல்நிலைய எஸ்.ஐ. சத்தியமூர்த்தி மற்றும் காவலர்கள் விரைந்தனர். அவரை மடக்கிப்பிடித்த காவல்துறையினர், ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பூச்சி சரவணனின் உறவினர் ஒருவர் கூறுகையில், ''ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு அவர் வேலைக்கு எங்கும் செல்லாமல்தான் இருந்து வந்தார். அவருக்குக் குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி டாஸ்மாக் கடைக்குச் சென்று வந்தார். அங்கிருந்துதான் அவருக்கு கரோனா பரவியிருக்கக் கூடும்,'' என்றார்.
பூச்சி சரவணனை கைது செய்யச் சென்ற கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் 3 சிறப்பு எஸ்.ஐ.-க்கள், 2 காவலர்கள் என மொத்தம் 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். கிச்சிப்பாளையம் காவல்நிலையத்திற்கும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.