Skip to main content

தகராறை தட்டிக்கேட்ட விவசாயி கத்தியால் குத்தி கொலை!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

Farmer


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது தாமல் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். வயது 55. இவரது தம்பி முருகன். முருகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் ஆகிய இருவருக்குமிடையே சொத்துப் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
 


இந்த நிலையில் சம்பவத்தன்று 7 மணியளவில் மகேந்திரன் தனது உறவினர்களான ஆமூரைச் சேர்ந்த குமார், அவரது மகன்கள் அருள், திவாகரன் மற்றும் சுபாஷ் ஆகியோருடன் தாமல் கிராமத்திற்குச் சென்று மகேந்திரனுக்கு ஆதரவாக முருகனிடம் தகராறு செய்துள்ளனர். இதனை நேரில் பார்த்த முருகனின் அண்ணன் சுந்தரம் ஏன் இப்படித் தேவையில்லாமல் என் தம்பியிடம் வந்து பிரச்சனை செய்கிறீர்கள், சொத்துப் பிரச்சினை பற்றிப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் அல்லது நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்ளலாம் அதைவிட்டுவிட்டு அவ்வபோது இப்படிக் கும்பலாக வந்து அடாவடி செய்யலாமா என்று தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் தரப்பினர், மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் சுந்தரத்தின் மார்பில் பலமாகக் குத்தி விட்டனர். சுந்தரத்தின் மார்பிலிருந்து ரத்தம் பீரீட்டு வழிய கத்தியால் குத்திய கும்பல் பயந்து ஓடிவிட்டனர். உடன் அக்கம் பக்கம் இருந்தவர்கள் சுந்தரத்தை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
 

 


சுந்தரம் கொலை செய்யப்பட்ட தகவல் திருநாவலூர் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவத்தில் மகேந்திரன் தரப்பைச் சேர்ந்த அருண் என்பவர் சுந்தரத்தை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிவு செய்து மகேந்திரன், அவர் தரப்பைச் சேர்ந்த குமார் அவரது மகன்கள் அருண் திவாகரன் மற்றும் சுபாஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார், மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்.

 

 


 

சார்ந்த செய்திகள்