
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள மல்லியூரைச் சேர்ந்தவர் இளங்கோ. 23 வயதான இவர் மெக்கானிக்கல் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா. இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போதே காதலித்து வந்தனர். சென்ற 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில், இன்று காலை நீண்ட நேரமாக இளங்கோ வீட்டின் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர் வீட்டுக்குச் சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது இளங்கோவும் -ரம்யாவும் தூக்கில் தொங்கியவாறு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஆப்பக்கூடல் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கடன் பிரச்சனையா? வருமானம் இல்லாமல் செலவுக்கு வழி இல்லாமல் இப்படியொரு விபரீத முடிவு எடுத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் திருமணமாகி 3 மாதமே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரோனா காலத்தில் பெரும்பாலும் வேலையில்லாமல், வருமானமில்லாமல் ஏராளமான குடும்பங்கள் அவதிப்படுகின்றன. இந்த நிலையில், வாழ்ந்து காட்டுவோம் எனத் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, வாழ வழியில்லாததால் இந்த பரிதாப முடிவை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.