
பிரபல ஜவுளி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் உள்ளிட்ட மூன்று கடைகளுக்கு கும்பகோணத்தில் உள்ள நகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.
கரோனா பரவலை தடுக்கும் வகையில் நடைமுறையிலுள்ள பொது முடக்கத்தில் சில தளர்வுகள் செய்யப்பட்டன. அதில் நிறுவனங்கள், கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், குறைந்த அளவிலான பணியாளர்களை அனுமதித்தல், குளிர் சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதோடு வாடிக்கையாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகளையும் செய்து வைத்திருக்க வேண்டும்.
ஆனால் மேற்கண்ட எந்த விதிகளையும் பின்பற்றாமலும், எவ்வித பாதுகாப்பும் இல்லாமலும் இயங்கியதால், வாடிக்கையாளர்களுக்கு கரோனா தொற்று பரவும் அபாயம் என்பதால் மூன்று கடைக்கு கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக சீல் வைத்தனர்.
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் அருகே உள்ள பிரபல ஜவுளி கடை, நாகேஸ்வரன் வீதியில் உள்ள முன்னணி எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் கடை மற்றும் 10 ரூபாய்க்கு பொருட்களை விற்கும் பிளாஸ்டிக் கடைகள் என விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மூன்று கடைகளுக்கு நகராட்சி ஆணையர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.