Skip to main content

அவங்க தானே நாங்க... ஈழ ஏதிலியர்களுக்கும் கரோனா நிவாரணம்!

Published on 24/05/2020 | Edited on 24/05/2020

 

 

ஊரடங்கு என்பது அனைவருக்கும் பொதுவானது தானே.? அவர்கள் படும் கஷ்டம் எங்களுக்குத் தெரியாதா என்ன? அவங்க தானே நாங்க! என இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழ தமிழ் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியுள்ளனர் முகமறியா தொப்புள் கொடி தமிழர்கள்.

 

இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய வேளையில், தங்களுடைய இன்னுயிரைக் காக்க இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து எவ்வித பாதுகாப்புமின்றி நாட்டுப்படகுகளின் மூலம் இந்தியாவிற்குள்- தமிழகத்திற்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். முதன் முதலில் 1983ம் ஆண்டு தமிழகம் நோக்கி அகதிகளாக வந்தவர்கள் தொடர்ந்து 1983-1987, 1989-1991, 1996-2003, 2006-2010 ம் காலக் கட்டங்களிலும் இந்தியாவிற்குள் வந்தார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இலங்கையிலிருந்து தப்பி வரும் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டிற்குள் வந்தவுடன் முதலில் தங்க வைத்து பரிசோதிக்கப்படுவது ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மண்டபம் முகாமில். 
 

பின் அங்கிருந்து மாவட்டங்களிலுள்ள வெவ்வேறு ஈழத்தமிழர்கள் முகாமிற்கு முறையான பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு தங்க வைக்கப்படுவர். குடும்பத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், மாதந்தோறும் உதவித் தொகைகளையும் வழங்கி வருகின்றது அரசு. எனினும், அதனைக் கொண்டு குடும்பம் நடத்த முடியாததால் கிடைக்கின்ற கூலி வேலைக்கு சென்று தங்களை தற்காத்துக் கொண்டு வருகின்றனர் இலங்கை அகதிகள் முகாமிலுள்ள ஈழத்தமிழர்கள்.
 

கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பலதரப்பட்ட தொழில்கள் முடங்கியது. இதில் கூலித் தொழிலாளிகளே முற்றிலும் பாதிக்கப்பட்டனர். இவ்வேளையில், எளியோர்களுக்கும், நலிவடைந்தோர்களுக்கும் நிவாரணப் பொருட்களும், உணவும் வழங்கினர் மனிதநேயமிக்க மனிதர்கள். 
 

ஆனால், புலம்பெயர்ந்து அகதிகள் முகாமில் வசிக்கும் ஏதிலியர்களின் நிலை பலருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், "நம்முடைய தொப்புள் கொடி உறவு தானே அவர்கள்" என 1990ல் துவக்கப்பட்ட சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் இலங்கை அகதிகள் முகாமிலுள்ள மொத்தம் 756 மக்கள் தொகையினைக் கொண்ட 245 குடும்பங்களுக்கான உருளை -1 கிலோ, கத்தரி - 1 கிலோ, தக்காளி - 1 கிலோ, சவ்சவ் - 1 கிலோ,  முட்டைகோசு-1கிலோ, பெரிய வெங்காயம் - 1 கிலோ, வாழைக்காய் - 1 சீப்பு, சீனி - 1/2 கிலோ, கோதுமை மாவு - 1/2 கிலோ, சோப்பு - 1, டீத்தூள் - 1 பாக்கெட், சேமியா - 1 பாக்கெட்  போன்ற அத்தியாவசிய நிவாரண பொருட்களை மரியதாஸ், தமிழக வாழ் இலங்கை தமிழ் ஏதிலியர் மன்ற குழு உறுப்பினர் மோகனதாஸ், சமூக ஆர்வலர் ஜான்பால் மற்றும் மரிய சோபியா ( உதவி பேராசிரியை ) திரு சிலுவை கல்லூரி - திருச்சி உள்ளிட்டோர் மூலம் வழங்க முன் வந்தனர் முகமறியா தொப்புள் கொடி உறவுகள், இதன் படி சனிக்கிழமையன்று மாலை வேளையில் ஒக்கூர் அகதிகள் முகாமிலுள்ள தேவலாயம் ஒன்றில் சமூக இடைவெளியுடன் கூட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
 

 

சார்ந்த செய்திகள்