திருவண்ணாமலை நகரத்தில் உள்ள அண்ணாமலையார் கோயில், ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆஸ்ரமங்களின் மீதான ஈர்ப்பில் ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து மாதக்கணக்கில் தங்கி செல்வர்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதும் அதாவது பிப்ரவரி, மார்ச் மாதங்களில் திருவண்ணாமலை வந்த 80 சதவித வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டுக்கு சென்றுவிடுவார்கள். தமிழகத்தில் குளிர்காலம் தொடங்கியதும் இங்கு வருவார்கள். மீதியுள்ள 20 சதவிதம் பேர் இங்கேயே இருப்பார்கள். விசா முடிந்ததும் தங்களது நாட்டுக்கு சென்று பின்னர் விசாவை நீட்டித்துக்கொண்டு இங்கு வந்துவிடுவார்கள்.
இந்நிலையில் சுமார் 200க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருவண்ணாமலை நகரில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் பற்றிய கணக்கெடுப்பை மாவட்ட நிர்வாகம் நடத்தி, அவர்களை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் மார்ச் 28ந்தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஜெர்மனி நாட்டை சேர்ந்த 5 பேர் வந்தனர். மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் முன்பு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர் மருத்துவர்கள். அவர்களுக்கு நோய் தொற்று எதுவும்மில்லை என்பது தெரியவந்தது. அவர்கள் ஒரு கடிதத்தை ஆட்சியர் கந்தசாமியிடம் தந்தனர். அதில் இந்தியாவில் உள்ள ஜெர்மனி தூதரகத்துக்கு மின்னஞ்சல் செய்துள்ளனர். அதில் தாங்கள் தாய்நாட்டுக்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளனர். அவர்கள் ஏற்பாடு செய்வதாக கூறி பதில் மின்னஞ்சல் செய்துள்ளனர். இதனை காட்டிய அவர்கள் எங்களை சென்னை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் கேட்டுக்கொண்டார்கள்.
தற்போது விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் இங்கேயே இருங்கள், உங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறோம், பாதுகாப்பாக இருங்கள் எனச்சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை தந்து அனுப்பினார்.
அதிகாரிகளோ, இவர்களை உடனடியாக அனுப்ப முடியாது. அப்படி அனுப்ப வேண்டுமாயின் அவர்கள் நாட்டு தூதரகத்தில் இருந்து அரசுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள் எனக்கேட்டு மின்னஞ்சல் வந்து அரசு உத்தரவிட்டால் மட்டுமே எங்களால் அனுப்ப முடியும் என்கிறார்கள்.