உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 3072 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நேரத்தை குறைத்து காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இதை வரவேற்றுள்ள பெட்ரோல் விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி, "தமிழக அரசு உத்தரவின்படி பெட்ரோல் பங்க்குகள் நாளை முதல் காலை 6 - மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும்" என்று தெரிவித்துள்ளார்.