கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு ஒருபுறமிருக்க, ஊரடங்கிலும் மக்களின் நலனை குறிக்கோளாக கொண்டு பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படுவது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனராக இருந்த, 55 வயது மருத்துவர் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று பேராயர் ஜார்ஜ் அந்தோணி தெரிவித்துள்ளார்.