திருச்சி மாநகராட்சி சார்பில் கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தடுப்பூசி முகாமை நடத்த திட்டமிட்டு, ஒவ்வொரு கல்லூரிகளிலும் மூன்று நாட்கள் முகாம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம் நடந்துவருகிறது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் 200 இடங்களில் தொடர்ந்து தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. மாநகரில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக பாரதிதாசன் பல்கலை மற்றும் கல்லூரியிலும் இரண்டு மருத்துவ குழுவினர் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது.
இதுகுறித்து மாநகர நகர்நல அலுவலர் கூறுகையில், “18 வயதைக் கடந்த புதிய நபர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு இந்த முகாம் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கல்லூரிக்கு மூன்று நாட்கள் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த முகாமானது காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. ஈவெரா கல்லூரியில் நேற்று (20.12.2021) மட்டும் 140 மாணவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து மாநகரில் உள்ள 25க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. கல்லூரிகள் இருக்கும் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் குழுவினர் மூலம் இந்த முகாம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் மருத்துவ குழுவினர் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.