
தமிழகம் மட்டுமின்றி, உலக நாடுகள் முழுவதையும் கரோனா அச்சுறுத்தி வந்தநிலையில், அதற்கான தடுப்பு மருந்து தற்போது பல்வேறு நாடுகள் கண்டுபிடித்து, அது மக்கள் பயன்பாட்டிற்கும் வந்துள்ளது. மேலும், இந்த தடுப்பு மருந்தை முதல் கட்டமாக மருத்துவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் செலுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று நடைபெற்ற முகாமில், திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் முதலாவதாக தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திருச்சியில் மொத்தம் 1820 காவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, நாளொன்றுக்கு 100 பேர் வீதம் மொத்தம் 1,820 பேருக்கும் கரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 மையங்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.