உலக நாடுகளை அச்சுறுத்தி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வரும் கரோனா தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கரோனா தொற்று சமூக பரவலால் அதிகம் பரவுவதை அறிந்து, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை வரும் 3-ந்தேதி வரை நீட்டித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் வீட்டிலே முடங்கியுள்ளனர். தினக்கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் ஏழைகுடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள குமராட்சியில் வசிக்கும் 2100 குடும்பங்களுக்கு, குமராட்சி அதிமுக சார்பில் அரிசி, காய்கறிகள் என தலா ரூ 500 மதிப்புள்ள தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி அந்த ஊராட்சியில் உள்ள 5 இடங்களில் நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஏ. பாண்டியன், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. என். முருகுமாறன். குமராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்குழலி பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார்கள்.