இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் சென்னையில் கரோனா தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தது. ஆனால், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கணிசமான அளவு உயந்துள்ளது. தற்போதுவரை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக, முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கும், இன்று காலை அமைச்சர் மூர்த்திக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.