சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைப் பணிகள் குறித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் ஆய்வு செய்தார்.
மேலும், அந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டில் 370 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைப் பிரிவைப் பார்வையிட்டு, மருத்துவர்களிடம் விவரங்கள் கேட்டறிந்தார். அப்போது இங்கு விரைவில் கரோனா தொற்று பரிசோதனை மையம் அமைக்க அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது. வரும் 10ம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. பொதுமக்கள் வெளியே வராமல் இருந்தாலே வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 1077 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வீடு தேடி வரும் என்றார்.
ஆய்வின் போது, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வா் ராஜ்குமார், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் சண்முகம், மருத்துவப் பணியாளா்கள் உடனிருந்தனா்.