ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் முதல் அலையை விட இரண்டாம் அலையின் வேகம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வைரஸ் தொற்று அனைத்துத் தரப்பு மக்களையும் வயது பேதமின்றிப் பரவியது. முன்கள பணியாளர்களும், இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
முதியவர்கள் அதிக அளவில் உயிரிழந்தனர். இரண்டாம் அலையில், ஒரே நாளில், 1,776 பேருக்கு கரோனா தொற்று என உச்சமடைந்தது. அதன்பிறகு பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து. கடந்த அக்டேர்பர் 1- ஆம் தேதி அன்று 102 பேருக்கு தொற்று அடுத்து, அக்டோபர் 2- ஆம் தேதிக்கு பிறகு 100- க்கு கீழ் கரோனா பாதிப்பு குறைந்து.
அதைத்தொடர்ந்து பாதிப்பு தினமும் குறைந்து டிசம்பர் 31- ல் தினசரி பாதிப்பு எண்ணிக்கை, 22 ஆக இருந்தது. ஆனால், இந்த மாதம் தினமும் கரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து, ஜனவரி 6- ஆம் தேதி 47 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 7- ஆம் தேதி அன்று 103 என மீண்டும் கடுமையாக உயரத் தொடங்கியிருக்கிறது.
இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜனவரி 8- ஆம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 8 ஆயிரத்து, 84 பேர் கெரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து, 6 ஆயிரத்து, 938 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 435 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, கரோனாவுக்கு 711 பேர் இறந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை 4,500 முதல் 5,000 வரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்ற இரண்டு நாட்களாக கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு 6,000 பேர் வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவும் தினசரி பாதிப்பு உயர்வுக்கு ஒரு காரணம் என்றாலும், வைரஸ் தொற்று பாதிப்பு இனி நாளுக்கு நாள் உயரும் என அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் சுகாதாரத் துறையினர்.