திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் பல அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் எடப்பாடியும், ஓபி.எஸ்ஸும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓ.பி.எஸ் பேசுகையில், தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக கிட்டத்தட்ட 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெரும். தொண்டர்கள், நிர்வாகிகள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். எனவே எப்போது தேர்தல் வந்தாலும் எதிர்க்கட்சியை தோற்கடிப்போம் என்று கூட்டத்தில் சபதம் ஏற்றுள்ளதாக கூறினார்.
அதனைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், எய்ம்ஸ் மருத்துவமனை பொறுத்தவரை ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே கோரிக்கை வைக்கப்பட்டு தமிழகத்தில் எய்ம்ஸ் அமைவது உறுதி செய்யப்பட்டது. பிரதமர் மோடி மதுரையிலே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தந்துள்ளார். விரைவிலே பாரத பிரதமரை சந்திப்பேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என கோரிக்கையை நேரில் வலியுறுத்துவேன். நிச்சயமாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் அதில் எந்த ஐயப்பாடும் வேண்டாம்.
பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து உயர் அதிகாரிகளை மூன்று முறை அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மழை அதிகமாக பெய்தால் வெள்ளம் வரும், அது இயற்கை. இப்போது கூட சுனாமி அடித்து இந்தோனோஷியாவில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆகவே இயற்கை என்பது யார்கிட்டயும் சொல்லிவிட்டு வருவதில்லை. அது எப்போ வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வெள்ளத்தடுப்பு எச்சரிக்கையை அரசு முன்கூட்டியே எடுத்து வருகிறது. மதுரையை பொறுத்தவரை ரொம்ப ராசியான இடம் தொட்டது துலங்கும் இடம் அந்த அடிப்படையிலேயே இன்று இங்கு முதல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது நடந்து முடிந்துள்ளது என்றார்.