தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். அதில், புதிய கல்வி கொள்கையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தெரிவித்த அவர், அதனை கடுமையான சொற்களை கொண்டு விமர்சனம் செய்தார். அவரின் இந்த கருத்துக்கு தமிழக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதைபோல தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவும் நடிகர் சூர்யா அரைவேக்காட்டு தனமாக பேசுவதாக கூறியிருந்தார். மேலும், கல்வியை பற்றி அவருக்கென்ன தெரியும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். சூர்யா தொடர்பாக அமைச்சரின் கருத்து, சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சூர்யாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் ஜெயகுமார், கல்விக்கொள்கை தொடர்பாக யாரும் கருத்து தெரிவி்க்க உரிமை உண்டு. நடிகர் சூர்யா அவருக்கு தோன்றியதை கூறியிருக்கிறார், அதனை விமர்சனம் செய்யவேண்டிய அவசியமில்லை. நிறை, குறைகளை யார் வேண்டுமானாலும் கூறலாம். அந்த வகையில் சூர்யா பேசியதில் தவறேதுமில்லை என்று நான் கருதுகிறேன் என்றார். மேலும் கமல் தொடர்பாக பேசிய அமைச்சர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பிஸியாக நடித்துக் கொண்டுள்ளதால் அவர் வேலூர் இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை என்று தெரிவித்தார்.