இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள் தற்போது மீண்டும் கரோனா தாக்குதலுக்கு உள்ளாகும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தத் தகவலை அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த சில வாரங்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொற்று பாதிப்புக்கு அவர் ஆளாகியுள்ளார்.