‘தண்டனை கடுமையா இருக்கக்கூடாது. ஆனா.. வித்தியாசமா இருக்கணும்.’ -ஊரடங்கை மீறி சாலைக்கு வருபவர்களுக்கு ‘பாடம்’ நடத்தியே தீரவேண்டும் என்பதில் தீவிரம் காட்டிவரும் காவல்துறையினரின் மனநிலை இது!
விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் மனதில் அப்படி எழுந்த ஒரு சிந்தனைதான் – சாலையில் வரையப்பட்ட பெரிய அளவிலான கரோனா ஓவியம். ’ஒரு வேலையும் இல்லியே.. சும்மா ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோம்!’ என்று கிளம்பி, மதுரை – சாத்தூர் பைபாஸ் ரோட்டுக்கு பப்ளிக் வந்துவிட்டால், கரோனா ஓவியத்தில் வால் மாதிரி நீண்டுள்ள வட்டத்தில், உட்கார வைத்துவிடுகின்றனர். “இப்ப எதுல உட்கார்ந்திருக்கீங்க? கரோனாவுலதான.. வெளிய வந்தா இந்த மாதிரிதான், கரோனா உங்கள பிடிச்சிக்கிரும்!’ என்று அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர்.
கரோனா ஓவியத்தின் பிடியிலிருந்து தப்பிவந்த ராஜசேகர், தனது அனுபவத்தைச் சொன்னார். சின்ன வயசுல ‘குலை குலையா முந்திரிக்கா.. நரியே நரியே சுற்றி வா.. கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான்? கூட்டத்தில் இருப்பவன் கண்டுபிடி’ன்னு பாடி விளையாடிய பழைய நெனப்பு வந்திருச்சு.” என்று கூறியவரை ‘க்ளிக்’ செய்ய முயற்சித்தபோது, “மொத்தமா எல்லாரும் உட்கார்ந்தத போட்டோ பிடிச்சீங்கள்ல. அதை போட்டுக்கங்க.. என்னோட தனி போட்டோ வேணாம். வீட்ல பசங்க பார்த்து சிரிக்கப் போறாங்க..” என்று நெளிந்தவர், “போலீஸ் பண்ணுற தப்பையும் கொஞ்சம் எழுதுங்க..” என்று தான் பார்த்ததை விவரித்துவிட்டுச் சென்றார்.
ராஜசேகர் குறிப்பிட்டுச் சொன்ன காவல்துறை அத்துமீறல் என்னவென்று பார்ப்போம்!
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘சரியான காரணம் எதுவும் இல்லாமல், அரசுத்துறையின் ஒப்புதல் இல்லாமல், 2 சக்கர வாகனங்கள் அல்லது 4 சக்கர வாகனங்களில், மதியம் 1 மணிக்கு மேல் பயணம் மேற்கொள்பவர்களைக் கைது செய்து, மேல் உத்தரவு இல்லாமலே வாகனங்களைப் பறிமுதல் செய்யலாம்’ என்று 144 தடையுத்தரவை மீறுபவர்கள் மீதான நடவடிக்கை குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உத்தரவில் மதியம் 1 மணிக்குமேல் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், பல ஊர்களிலும் அதற்கு முன்பாகவே, காவல்துறையினரின் ‘நடவடிக்கை’ ஆரம்பித்துவிடுகிறது. பகல் 11 மணிக்கு டூ வீலரில் சென்ற கணவன், மனைவி மீதெல்லாம் வழக்கு பதிவு செய்வது சர்வ சாதாரணமாக நடக்கிறது. ‘எதுக்கு டபுள்ஸ் போறீங்க?’ என்று விருதுநகரில் காவல்துறையினர் கடுமை காட்டி வருவது, பொதுமக்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியிருக்கிறது. அதற்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் விதத்தில், டூ வீலர்களில் காவலர்கள் இருவராகச் செல்வதையெல்லாம் படம் பிடித்து, ‘உங்களுக்கு மட்டும் தனிச்சட்டமா?’ என்று கேள்வி கேட்டு, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
மனித உயிர்களோடு கரோனா கொடூர ஆட்டம் போடுகிறதென்றால், மக்களைக் காப்பாற்றுவதே நோக்கமென்றாலும், சட்டத்தின் பெயரால், ஒவ்வொரு நாளும் தினுசு தினுசாக காவல்துறையினர் விளையாடி வருகின்றனர்.
காவல்துறையினர் நடந்துகொள்ளும் முறை பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், காவல்துறையினருக்கு எதிராக புகார் அளிப்பதற்கு வசதி ஏற்படுத்தக்கோரி, சட்டக்கல்லூரி மாணவர் ஆப்ரீன் என்பவர், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். அதற்கு, தமிழக டி.ஜி.பி.யிடம் விளக்கம் கேட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.